மனை வாங்கப் போறீங்களா?

மனை வாங்கப் போறீங்களா?

ஆதாம், ஏவாள் காலத்திலேருந்து இப்போ வரைக்கும் குடியிருக்க ஒரு இடம்ங்கறது எல்லாருக்குமே கனவுதான். கனவில் கண்டதை நிஜமாக்கும்போது பல விஷயங்களையும் ஆலோசனை பண்ணித்தான் முடிவு செய்யணும். ஏன்னா, இன்னிக்கு இருக்கற நிலைமையில யாரையும் நம்பி எதுவும் செஞ்சிட முடியாது. கனவை நனவாக்கிற அவசரத்துல முதலீட்டுல சிக்கல் எதுவும் வந்திடக் கூடாதில்லையா!

மனை எப்படி இருக்கு?

ஒரு இடத்தைப் பார்க்கப் போகும்போதே நம்ம வேலை ஆரம்பிச்சுடுது. 'இங்கனதான் பக்கத்துல...'னு சொல்லி வேன் வெச்சு கூட்டிட்டுப் போய் அத்துவானக் காட்டுக்குள்ள இருக்குற இடத்தைக் காட்டுவாங்க. அதுமாதிரி போய் மாட்டிக்கிடக் கூடாது.

ஒரு இடத்தை வாங்கலாமா... வேண்டாமானு முடிவு செய்யறதுக்கு அடிப்படையா சில விஷயங்களைக் கவனிக்கணும்.

'அந்த இடம் மழை நேரத்துல சேறு, சகதி, குட்டை, குளம் ஆகாம, வாழுறதுக்கு ஏத்ததா இருக்குமா... குடிதண்ணீர், கழிவுநீர் வசதி, மின்சாரம் எல்லாம் உடனே கிடைக்குமா... பக்கத்துலயே பள்ளிக்கூடம் , கடைகள் எல்லாம் இருக்கா... போக்குவரத்துக்கு ஏத்த மாதிரி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கா... குறைந்தபட்சம் ஒரு ஆட்டோ ஸ்டாண்டாவது இருக்கா... ஆத்திர அவசரத்துக்கு பத்து நிமிஷத்துல போற மாதிரி நல்ல ஆஸ்பத்திரி இருக்கா... அந்த ஏரியாவில் பேங்க்கோ, ஏ.டி.எம். மெஷினோ இருக்கா...'னு பலதையும் பார்த்து, ஒரு இடத்தை வாங்கலாமா, வேண்டாமானு முடிவு செய்யணும்.

நாம வாங்குன உடனே வீடுகட்டி குடிபோறதா இருந்தாதான் இதெல்லாம் பார்க்கணும்ங்கிறது இல்லை... எதிர்காலத்துல விலையேறும், நல்லா டெவலப் ஆகும்னு முதலீட்டு நோக்கத்துல வாங்கறதா இருந்தாலும் இந்த வசதிகள் எல்லாம் இருக்கானு பாத்துக்கறது நல்லது.

விவசாய நிலமா... கூடுதல் கவனம் வேண்டும்!

வாங்கப் போற நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தினதா இருந்தா... ரொம்பவே கவனமா இருக்கணும். ஏன்னா, விவசாய நிலத்தை மத்த விஷயத்துக்கும் பயன்படுத்தலாம்னு உள்ளாட்சி அமைப்பு அனுமதி கொடுத்திருக்கணும். அப்போதான் அதிலே வீடுகட்டமுடியும். சிலர், மலிவா கிடைக்குதேனு அதையெல்லாம் பாக்காம வாங்கிடுவாங்க. அதுக்குப் பிறகு, வீடு கட்ட அனுமதி வாங்கறதுக்குள்ளே உன்பாடு, என்பாடுனு ஆகிடும். நாம வாங்கப் போறதே கையளவு இடம்... அதை வெச்சுக்கிட்டு விவசாயமும் பண்ணமுடியாது. அதனால், வாங்கும்போதே முறையா அனுமதி வாங்கின இடமானு பார்த்து வாங்குங்க!