வேலை மாற்றம் - எதற்காக மாறலாம்? எதற்காக மாறக்கூடாது?

வேலை மாற்றம் - எதற்காக மாறலாம்? எதற்காக மாறக்கூடாது?


இருக்கும் வேலையில் எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. சரி, வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குப் போய்விடலாம் என்றாலும் குழப்பம்! புதிதாக வேலைக்குச் சேரும் நிறுவனத்தில் நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா, சம்பளம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல கேள்விகள் எழும். வேலை மாறவேண்டும் என்கிற முடிவை ஒருவர் எப்போது எடுக்கலாம், என்ன காரணங்களுக்காக வேலை மாறும் முடிவை ஒருவர் எடுக்கக்கூடாது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் காம்ஃபை சொல்யூஷன் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரன்.

 ''இன்றைய காலகட்டத்தில் சம்பளத்தை நம்பி வீட்டுக் கடன், கார் கடன், தனி நபர் கடன் என பல கடன்களை வாங்கி வைத்திருக்கிறோம். எனவே, ஒரு மாதம் சம்பளம் இல்லாவிட்டாலும் திண்டாட்டம்தான். இப்படி பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில்தான் வேலை மாறலாம் என பலரும் யோசித்துக் கொண்டே, அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.

இப்படி இருப்பதும் தவறு; அதாவது, ஒரு நிறுவனத்தில் இதற்குமேல் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை என்கிற வெறுமை உருவாகும் போது வேலை மாற்றம் பற்றி யோசிக்கலாம். இப்போது வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களுக்கு பெரிய வளர்ச்சி இல்லை என்ற நிலை உருவாகும்போதும் வேலையைவிடலாம். உங்களின் எண்ணமும் நிறுவனத்தின் எண்ணமும் இயைந்து போகவில்லை; ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தும் உங்களுக்கு சரியான சம்பளம் மற்றும் பதவி கிடைக்கவில்லை எனில், வேலையை விடுவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம். வகிக்கும் பதவிக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க முடியவில்லையே என்கிற காரணத்தினாலும் சிலர்  வேலையை விடுவது உண்டு.

ஆனால், சில அற்ப காரணங்களுக்காக, வேலையை விடுவதும் முட்டாள்தனம். பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நிறுவனத் தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வேலை பார்ப்பது என்பதே பெரிய விஷயமாக உள்ளது. சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் இந்த வருடத்தில் மட்டுமே 25 சதவிகிதத்துக்கு அதிகமானோர் வேலையைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, இன்னும் ஐந்து வருடங்களில் பல லட்சம்பேர் வேலையைவிட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேலைக்குச் சேரும்முன் அந்த நிறுவனம் நமக்கு சரிவருமா, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுதான் வேலைக்குச் சேருகிறோம். அப்படி இருந்தும் அலுவலகங்களில் நடக்கும் சின்ன சின்ன இடையூறுகளுக்காக வேலையைவிட்டுச் செல்கிறார்கள் சிலர். சிறுசிறு இடையூறுகளை எல்லாம் சமாளிக்கத் தெரிந்தால்தான் வெற்றி பெறமுடியும்.

அடிக்கடி வேலை மாறினாலும் உங்களுடைய ஜாப் கேரியரை அது பாதிக்கும் என்பதை மறக்காதீர்கள். அடிக்கடி வேலை மாறுவது உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கவே செய்யும். நீங்கள் நிலையாக ஓர் இடத்தில் வேலை பார்க்கும் திறமையற்றவர் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும். வேலையில் சேர்ந்த சில நாட்களில் அல்லது சில மாதங் களில், வேறு நிறுவனத்தில் சம்பளம் சற்று அதிகமாக கிடைக்கும் என்பதற்காக வேலை மாறக்கூடாது. அதேபோல, வேலைபளு அதிகம் உள்ளது; அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை; அலுவலகம் அதிக தொலைவில் உள்ளது போன்ற காரணங்களால் வேலை மாற வேண்டும் என்று நினைப்பதே தவறு. அதேபோல, குடும்பப் பிரச்னைகளை காரணம் சொல்லி வேலையைவிடுவதும் தவறு. வாழ்க்கையில் எப்போதுமே பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதை சமாளித்து ஜெயிப்பதுதான் வாழ்க்கை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

புதிதாகத் தொடங்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது கூடுதல் கவனம் அவசியம். ஏனெனில், எதிர்காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே, புதிய நிறுவனத்தை யார் தொடங்குகிறார்கள், அதனுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கவனித்து வேலையில் சேர்வது நல்லது'' என்றார்.

வேலை மாறலாம் என்கிற சிந்தனையில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தால் பிற்பாடு வருத்தப்படவேண்டிய அவசியம் இருக்காது!